கொரோனா சூழலில் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு தான்: கி.வீரமணி


கொரோனா சூழலில் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு தான்: கி.வீரமணி
x
தினத்தந்தி 4 Sep 2021 11:55 PM GMT (Updated: 4 Sep 2021 11:55 PM GMT)

கொரோனா சூழலில் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு தான். இது தெரியாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்காத தி.மு.க. அரசை விமர்சிக்க வேண்டாம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை தொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் வரும் 17-ந் தேதி பெரியாரின் 143-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் பெரிய கூட்டத்தை தவிர்த்து பெரியார் நினைவிடத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து பெரியார் திடலில் கருந்தரங்கம் நடைபெறும். தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அவர் அகற்றியுள்ளார். எனவே இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாள் சிறப்பு வாய்ந்ததாகும்.

பெரியார் உலகம்
மேலும் பெரியார் உலகம் என்ற பெயரில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் சிறப்பு அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பணி கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 95 அடி உயர பெரியார் சிலையும், 40 அடி அகலத்தில் பீடமும் அமைக்கப்படும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உதவியுடன் பா.ஜ.க வெற்றி பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்துவிடும்.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் கொண்டாட வேண்டாம் என்று கூறிய மத்திய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பா.ஜ.க. ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பின்னர் தமிழகத்துக்கு அவர் வரட்டும். அப்படி ஆட்சியை கலைத்து தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடைபெற்றாலும், எதிர்க்கட்சியே இல்லாமல் மீண்டும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story