நிபா வைரஸ்; தமிழகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


நிபா வைரஸ்; தமிழகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 5 Sep 2021 9:52 AM GMT (Updated: 5 Sep 2021 9:52 AM GMT)

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது.

சென்னை,

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

'ஜிகா வைரஸ் வந்தபோதே கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டோம். தொடர்ந்து கேரளாவின் எல்லைப்புறப் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களே பெரும்பாலும் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நிபா வைரஸ் குறித்த செய்தி வந்திருக்கிறது. அதுகுறித்த தகவல் தெரிந்ததும் கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளுக்கும் அவ்வைரஸ் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவர்களிடம் பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், காய்ச்சல் முகாம்களை எல்லையோரம் அதிகரிக்கவும் கூறி இருக்கிறோம். கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக சுகாதாரத்துறை மிகச் சிறந்த கட்டமைப்பில் உள்ளது. புதிய வைரஸ்கள் வரும்போது அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு நம்மிடம் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகம் நிச்சயமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story