2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி செய்யும்: அண்ணாமலை


2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி செய்யும்:  அண்ணாமலை
x
தினத்தந்தி 5 Sep 2021 7:44 PM GMT (Updated: 5 Sep 2021 7:44 PM GMT)

2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்யும் என சிவகாசியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

செயல்வீரர்கள் கூட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கை 150-ஆக உயரும். தமிழக அரசின் சின்னமாக உங்கள் பகுதியை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தான் உள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு பெருமை. தமிழகம் ஆன்மிக பூமி. இங்குதான் அதிக அளவில் கோவில்கள் உள்ளது. தமிழக அரசும் சட்ட சபையில் பல நல்ல அறிவிப்புகளை அறநிலையத்துறை சார்பில் அறிவித்துள்ளது. தற்போது உள்ள ஆட்சி தான் திராவிட அரசியலின் கடைசி ஆட்சி.

போராடி வருகிறது
தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத ஒரு கட்டமைப்பு பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறது. பாரதீய ஜனதாவில் மட்டும் தான் அடுத்த கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். ஏழை குடும்பத்தில் பிறந்த முருகன் தான் தற்போது மத்திய மந்திரியாக இருக்கிறார். இதுபோன்ற அதிசயங்கள் இந்த கட்சியில் தான் நடக்கும். 2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்யும்.
தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகள் மோடி ஆட்சியில் பயன்பெற்றுள்ளனர். 32 லட்சம் பேர் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர். 60 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுத்துள்ளோம். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைக்க மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

விருதுநகர் தொகுதி
மோடி ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் 4 கோடி மக்கள் நேரடியாக பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். அடுத்து வரும் நாட் களில் இந்த எண்ணிக்கை 5 கோடியாக உயரும். 2024 பாராளுமன்ற தேர்தலின் போது மோடி எவ்வளவு சாதனைகளை செய்துள்ளார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும். குறிப்பாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கைப்பற்ற வேண்டும். இந்த பகுதியில் உள்ள பட்டாசு பிரச்சினைகளை பேச பாரதீய ஜனதா சார்பில் ஒருவர் எம்.பி.யாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இப்போதே பூத் கமிட்டி அமைத்து கட்சியை வளர்க்க வேண்டும். பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் தங்களது குடும்ப சொத்து விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவார்களா? சீன பட்டாசை ஒழித்த பெருமை பாரதீய ஜனதா கட்சியை தான் சேரும்.விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் 51 ஆயிரம் ஓட்டு வாங்கி உள்ளோம். இது பாரதீய ஜனதா கட்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி தான். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி விருதுநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். பாரதீய ஜனதா கட்சியை பொறுத்த வரை பொறுப்புகள் நிர்வாகிகளை தேடி வரும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் இல.கணேசன் ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டது. தொண்டர்களின் உழைப்புக்கு நிச்சயம் உரிய அங்கீகாரம் பாரதீய ஜனதாவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிலோன்காலனியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Next Story