சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீடு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீடு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 5 Sep 2021 10:53 PM GMT (Updated: 5 Sep 2021 10:53 PM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை மீண்டும் விசாரிக்கிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சி.பி.ஐ. விசாரணை
இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

மேல்முறையீடு மனு
இதற்கிடையே, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதுபோல பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

நாளை விசாரணை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக் கோரி ரகு கணேஷ் ஏற்கெனவே மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரிக்க உள்ளது.


Next Story