தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி


தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 5 Sep 2021 11:19 PM GMT (Updated: 5 Sep 2021 11:19 PM GMT)

தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

விருது வழங்கும் விழா
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடக்கப்பள்ளிகள்
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதல் 8 நாட்கள் பள்ளிகள் எப்படி உள்ளது, அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்அடிப்படையில் ஆய்வு செய்ய இருக்கிறோம். தொடக்கப்பள்ளிகள் என்பது மிகவும் முக்கியமானது. தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்து 8 நாட்களுக்கு பின்பு (9-ந் தேதி) கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

கொரோனா கட்டத்தால் ஒரு வகுப்பில் இருந்து மாணவர்கள் நேரடியாக அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் இணைப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 800 மருத்துவர்கள் பள்ளிகளை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில மாணவர்களை தோராயமாக பரிசோதனைக்குட்படுத்தும்போது, கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த வகுப்பறைகள் மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை.

12 ஆயிரம் வழக்குகள்
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என ஒவ்வொரு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இவற்றையெல்லாம் பரிசீலித்தால் 11 வகையான கோரிக்கைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுவரை ஆசிரியர்கள் தரப்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே ஆசிரியர்களின் கோரிக்கைகளில் எதை, எதை செய்ய முடியுமோ, அதை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகப்பட்டினத்தில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. மாணவர்களின் மீது உள்ள அக்கறை காரணமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது. பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு தனியாக ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story