வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புபடம்
x
கோப்புபடம்
தினத்தந்தி 6 Sep 2021 8:07 AM GMT (Updated: 6 Sep 2021 8:07 AM GMT)

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோவை , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (07-09-21) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (08-09-21) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9,10 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்.

இன்றும் நாளையும் கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் குறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் 10-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் இதனால் மீன்பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story