கோடநாடு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை...!


கோடநாடு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை...!
x
தினத்தந்தி 6 Sep 2021 8:28 AM GMT (Updated: 6 Sep 2021 8:28 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக கோர்ட்டு அனுமதி பெற்று, சயானிடம் போலீசார் மறு விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதில் வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும் விபத்தில் இறந்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி மற்றும் கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில்  விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை. மேலும் அரசு தரப்பில், வழக்கில் முழு விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று முழு விசாரணை நடத்த 4 வார கால அவகாசம் வழங்கி, வழக்கை அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்தி வைத்தார்.

இதையடுத்து அரசு தரப்பில் முழு விசாரணைக்காக காவல்துறை மூலம் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை தனிப்படை போலீசார் உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். ஷாஜியை பொறுத்தவரையில் அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது, உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story