தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து? அமைச்சர் விளக்கம்


தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து? அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 6 Sep 2021 3:46 PM GMT (Updated: 6 Sep 2021 3:46 PM GMT)

நிபா வைரசால் தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார்.




சென்னை,

கேரளாவின் கோழிக்கோடு நகரில் நிபா வைரஸ் காரணமாக நேற்று 12 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இந்த நிலையில், 7 பேருக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதனையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளுக்கு இந்த பாதிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிற்கு பேருந்துகள் ரத்து செய்யப்படுமா? என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், நிபா வைரஸ் காரணமாக தமிழகம்-கேரளா இடையிலான போக்குவரத்து ரத்து செய்யப்படாது.

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.  வாகனங்களில் வருவோருக்கு பரிசோதனைகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  கேரளாவில் நிபா, கொரோனா ஆகிய பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் எல்லையில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


Next Story