லாலாபேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை


லாலாபேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 6 Sep 2021 6:59 PM GMT (Updated: 6 Sep 2021 6:59 PM GMT)

கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுதலை செய்யக்கோரி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாலாபேட்டை, 
வாலிபர் வெட்டிக்கொலை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் அருண்குமார் (வயது 23). கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில்  அருண்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நந்தன் கோட்டையை சேர்ந்த பெரியசாமி (32), வினோத் (24), கீழ சிந்தலவாடியை சேர்ந்த ஆனந்தன் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமலிருக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்தநிலையில் இறந்துபோன அருண்குமாரின் சித்தப்பா சண்முகத்தை (37) விசாரணைக்காக நேற்று இரவு 7 மணியளவில் லாலாபேட்டை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அருண்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சண்முகத்தின் மனைவி நதியா, அருண்குமாரின் சகோதரி பூங்கொடி ஆகியோர் தலையில் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களது தலையில் தண்ணீரை ஊற்றி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து அருண்குமாரின் உறவினர்கள் கூறுகையில், அருண்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சண்முகத்தை விசாரணைக்காக அழைத்து ெசன்று அவர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினர். மேலும், சண்முகத்தை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அசோக்குமார், ஸ்ரீதர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் இரவு 11 மணிவரை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story