வைப்புத்தொகை வட்டியை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வைப்புத்தொகை வட்டியை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Sep 2021 9:50 PM GMT (Updated: 6 Sep 2021 9:50 PM GMT)

முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வட்டி குறைப்பு
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கார்த்திகா அசோக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா ஊரடங்குக்கு முன் மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு வங்கிகள் 8.5 முதல் 9 சதவீதம் வட்டி வழங்கின. கொரோனா ஊரடங்குக்குப் பின் இந்த வட்டித்தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வட்டியைக் குறைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஊரடங்குக்கு முன்பு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கொள்கை முடிவு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம், மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்று முடிவு செய்வது மத்திய அரசின் கொள்கை முடிவாகும். எனவே இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க முடியாது.

பரிசீலிக்க வேண்டும்
அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story