கோடநாடு வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய மனு மீது சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Sep 2021 3:20 AM GMT (Updated: 7 Sep 2021 3:20 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தார். இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. கொடநாடு வழக்கை பொறுத்தவரை தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாகவே காவல்துறை இந்த கோடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று  தெரிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் அனுபவ் ரவி  மேல்முறையீடு செய்தார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், சுப்ரீம்கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கோடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீது இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story