வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை- அமைச்சர் செந்தில்பாலாஜி


வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை- அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 7 Sep 2021 12:28 PM GMT (Updated: 7 Sep 2021 12:28 PM GMT)

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை: 

சட்டசபையில்  மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது;-

கடந்த ஆட்சியில் அறிவித்த மின் திட்டங்களில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் 2.09 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 82,000 விவசாய மின் இணைப்பும், 2016-21ல் 1.38 லட்சம் விவசாய இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனல்மின் நிலையங்கள் மூலம் 85 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி, அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2016 ல் 78 சதவீதமாக குறைந்தது, பின்னர் 2016 முதல் 2021 வரை 58 சதவீதமாக குறைந்தது. தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகத்தான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதில் குறுகிய கால ஒப்பந்தம் போடாமல் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது ஏன். அ.தி.மு.க ஆட்சியில் வெளியில் 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு எரிசக்தி கழகம் மூலமாகவே 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் அனல் மின் நிலையங்கள் மூலமாக மின் உற்பத்தியை பெருக்குவதே அரசின் இலக்கு.

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணோம்.தூத்துக்குடியில் ஆய்வு செய்தபோது அங்கு 71,857 மெட்ரிக் டன் நிலக்கரியை காணவில்லை.

தேனி மாவட்டத்தில் 500 மெகா வாட் நீரேற்று சேமிப்பு புனல் மின்நிலையம் அமைக்கப்படும். 

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாரில் 500 மெகா வாட் நீரேற்று சேமிப்பு புனல் மின்நிலையம் அமைக்கப்படும்.

தமிழகத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், துரித நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.

Next Story