12-ந் தேதி தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


12-ந் தேதி தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 Sep 2021 12:24 AM GMT (Updated: 8 Sep 2021 12:24 AM GMT)

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்
கொரோனா நோய்த் தடுப்பில் தடுப்பூசி தான் பெரிய அளவில் பங்காற்றுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடுகிறது.கடந்த 30-ந் தேதியில் இருந்து நாளொன்றுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 5-ந் தேதி வரை 3 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 824 பேர் (முதல் மற்றும் 2-ம் தவணை சேர்த்து) பயன் அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில், ‘மெகா கொரோனா தடுப்பூசி முகாம்' வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்
அதன்படி, தமிழகம் முழுவதும் வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் 40 ஆயிரத்து 399 இடங்களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 652 இடங்கள் சேர்த்து மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. கூடுதலாக சேர்க்கப்படும் இடங்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத இடங்களில் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒரு முகாமில் 4 பேர்
* ஒரு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தவும், அதனை பதிவு செய்யவும் தலா ஒருவர், 2 அங்கன்வாடி ஊழியர்கள் என மொத்தம் 4 பேரை நியமிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் நர்சுகளும், அதனை பதிவு செய்யும் பணியில் ஆசிரியர்கள், பொது சேவை மைய பணியாளர்களும் நியமிக்கப்படலாம். அதேபோல், கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் டோக்கன் வழங்கும் பணிகளுக்கு வருவாய்த்துறை, உணவு பொருள் வழங்கல் துறை போன்ற துறை பணியாளர்களையும் ஈடுபடுத்தலாம்.

* தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சாமியானா பந்தல், இருக்கைகள், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்காக போலீசாரை நியமித்து, பயனாளர்களை வரிசையில் நிற்க செய்யவேண்டும்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

* ஒரு மேற்பார்வையாளர் தடுப்பூசி செலுத்தும் 5 முதல் 8 இடங்களை பார்வையிட வேண்டும்.

* இந்த மெகா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்த பிரசாரம் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட வேண்டும்.

* மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் நாளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story