புலவர் புலமைப்பித்தன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், ஜி.கே.வாசன், வைரமுத்து இரங்கல்


புலவர் புலமைப்பித்தன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், ஜி.கே.வாசன், வைரமுத்து இரங்கல்
x
தினத்தந்தி 8 Sep 2021 6:27 AM GMT (Updated: 8 Sep 2021 6:27 AM GMT)

புலவர் புலமைப்பித்தனின் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை

பிரபல கவிஞரும், அ.தி.மு.க முன்னாள் அவைத் தலைவருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் காலமானார். வருக்கு வயது 85.வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்-அமைச்சர்  எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர் புலவர் புலமைபித்தன். புலமைப்பித்தன். 2015ம் ஆண்டில் வடிவேலு நடித்த எலி படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதியிருந்தார்.

புலவர்  புலமைப்பித்தனின் மறைவிற்கு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவை துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'எனக்குறி உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதவது:-

'அ.தி.மு.க வின் முன்னாள் அவைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆருடனும், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். தமிழ்த்திரையுலகில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் பெற்றவர். தமிழ் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியவர்.

அன்னாரது மறைவு அ.தி.மு.க வுக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க இயக்கத்தினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு, வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்க் கலை உலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்

திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்

அவருடைய பலபாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை

தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்

அவர் மறைவு
துயரம் தருகிறது

குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Next Story