நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Sep 2021 10:54 PM GMT (Updated: 8 Sep 2021 10:54 PM GMT)

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் போலீஸ் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த போலீஸ் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

ஏராளமான ஆக்கிரமிப்பு

இந்த குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், போலீஸ் நிலையம் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இதை இடிப்பதால் பெரிய மாற்றம் ஏற்படாது. அங்கு ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, தாமரைக்கேணி நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் அந்த குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அழிக்கக்கூடாது

தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.

காணவில்லை

சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளது. அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story