சபாநாயகரிடம் அனுமதி பெறாததால் பேச வாய்ப்பு மறுப்பு: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு


சபாநாயகரிடம் அனுமதி பெறாததால் பேச வாய்ப்பு மறுப்பு: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 11:04 PM GMT (Updated: 8 Sep 2021 11:04 PM GMT)

சட்டசபையில் சபாநாயகரிடம் அனுமதி பெறாததால் அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி. முனுசாமிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச முற்பட்டார்.

சபாநாயகர்:- நீங்கள் திடீரென இப்படி பேசினால் அமைச்சரால் பதில் கொடுக்க இயலாது. நீங்கள் நாளை பேசலாம். அனுமதி தருகிறேன். இது போன்று பேச வேண்டும் என்றால் முன்கூட்டியே என்னிடம் அனுமதி பெற வேண்டும். ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து பேச முற்பட்டார்.

அப்போது, அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து விளக்கம் அளித்தார். மேலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து தனது கருத்தை பதிய வைக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர், இப்படி பேசுவதை மானிய கோரிக்கையில்தான் பேச வேண்டும். முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.

வெளிநடப்பு

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கே.பி.முனுசாமியை முழுவதும் பேச விடுங்கள். பாதியிலேயே பேச்சை நிறுத்தச்சொன்னால் எப்படி' என்றார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே கே.பி.முனுசாமி தெரிவித்த கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் அவர் நாளைக்கு நீங்கள் பேசலாம் என்றார். ஆனால் இதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், “நீங்கள் ஏதோ காரணத்திற்காக திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள், வெளியே போய்விட்டு திரும்ப வாருங்கள்’’ என்றார். இதைத்தொடர்ந்து அவையின் அடுத்த நிகழ்வுகள் தொடங்கின. இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

துரைமுருகன் கருத்து

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, “இப்போது தெரிகிறதா? ஏன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியே ஓடினார்கள்? என்று, அவர்களுக்கு இந்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லை. அதனால்தான் வெளிநடப்பு செய்து விட்டார்கள்” என்றார்.

Next Story