ஆதிதிராவிடர் நல ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன்வடிவு சட்டசபையில் தாக்கல்


ஆதிதிராவிடர் நல ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன்வடிவு சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:20 AM GMT (Updated: 9 Sep 2021 8:22 AM GMT)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்டமுன்வடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 

அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண “ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் இதனை அறிவித்தார். 

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சியுடன் அமைக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றம் உருவாக்கப்படும். அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை நெல்லை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்ச சிறப்பு தொகை பரிசாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை தலையிடாது. சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து இன்று தமிழக சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்டமுன்வடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவானது விரைவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. முதல்-அமைச்சர் நேரடியாக இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story