சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்


சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:17 AM GMT (Updated: 9 Sep 2021 10:17 AM GMT)

கோடநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி இடையே சட்டசபையில்  காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டசபையில் , ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார்.  அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

அதுபோல் மதியம் கோநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மறைந்த முதல்-அமைச்சர் கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கோடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல; கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என முதல்-அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை. புலன் விசாரணை வேண்டாம் என  கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story