சிறை கைதிகளின் கை வண்ணத்தில் தயாரான விநாயகர் சிலைகள்


சிறை கைதிகளின் கை வண்ணத்தில் தயாரான  விநாயகர் சிலைகள்
x
தினத்தந்தி 9 Sep 2021 4:09 PM GMT (Updated: 2021-09-09T21:39:37+05:30)

சிறை கைதிகளின் கைவண்ணத்தில் தயாரான விநாயகர் சிலைகளின் விற்பனையை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தொடங்கி வைத்தார்.

சிறை கைதிகளின் கைவண்ணத்தில் தயாரான விநாயகர் சிலைகளின் விற்பனையை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தொடங்கி வைத்தார்.
விதவிதமான சிலைகள்
புதுவை சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக வேளாண்மை, கைவினை பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சியும் இதில் அடங்கும்.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தற்போது காகிதக்கூழ் கொண்டு கைதிகளின் கை வண்ணத்தில் விதவிதமான விநாயகர் சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை பொதுமக்கள் பார்வையிடவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
விற்பனை
அதன்படி சிறைத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் விநாயகர் சிலைகளின் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை உள்ளாட்சித்துறை இயக்குனரும், சிறைத்துறை ஐ.ஜி.யுமான ரவிதீப் சிங் சாகர் பார்வையிட்டு விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின் நிருபர்களிடம் ரவிதீப்சிங் சாகர் கூறியதாவது:-
மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சி
சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். கைதிகள் தற்போது விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர். அந்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறையின் வாசல் பகுதியிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியாத நிலை இருந்தது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதை தவிர்க்கும் வகையில் கைதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்குள் ஏற்படும் மோதலை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story