ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, கார் மீது கவிழ்ந்தது; பெண் டாக்டர் நசுங்கி பலி


ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, கார் மீது கவிழ்ந்தது; பெண் டாக்டர் நசுங்கி பலி
x
தினத்தந்தி 9 Sep 2021 9:11 PM GMT (Updated: 2021-09-10T02:41:03+05:30)

சிவகங்கை அருகே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி திடீரென கார் மீது கவிழ்ந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண் டாக்டர் நசுங்கி பலியானார்.

சிவகங்கை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர் குழந்தைகள் நல டாக்டராக இருந்து தற்சமயம் ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய கணவர் ஆதப்பன் சில ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டார். இவர்களுக்கு கணேசன் என்ற மகனும், நாகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் மருத்துவ படிப்பு முடித்து தற்போது வெளிநாட்டில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது இந்திரா மட்டும் மதுரையில் தனியாக வசித்தார். நேற்று இவர் சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்றார்.

காரை அவரே ஓட்டிச்சென்றார். திருமணம் முடிந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் காளையார்மங்கலம் விலக்கு ரோட்டில் இருந்து சிவகங்கை-திருப்பத்தூர் பிரதான சாலைக்கு வந்த போது அந்த வழியில் திருமயத்தில் இருந்து சிவகங்கைக்கு ஜல்லி கற்கள் ஏற்றிகொண்டு லாரி ஒன்று வந்தது.

அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அப்போது லாரியின் பக்கவாட்டில் சென்ற டாக்டர் இந்திரா வந்த காரின் மீது கவிழ்ந்தது. இதில் கார் நசுங்கி லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது.

பரிதாப சாவு

காரிலேயே டாக்டர் இந்திரா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லாரியில் இருந்த ஜல்லி கற்கள் ரோட்டில் கொட்டி சிதறின. விபத்து பற்றி தகவலறிந்த மதகுபட்டி போலீசாரும், தீயணைப்பு படையினரும் வந்தனர். தீயணைப்பு படையினர், எந்திரங்களை கொண்டு சுமார் 3 மணிநேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிக் கிடந்த காரை வெளியே எடுத்து டாக்டர் இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாட்டரசன்கோட்டையை சேர்ந்த அஜித்குமாரை (27) கைது செய்தனர்.

Next Story