பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி


பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 9 Sep 2021 9:15 PM GMT (Updated: 9 Sep 2021 9:15 PM GMT)

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை,

நெல்லையை சேர்ந்த குற்றாலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும், அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தியேட்டர்கள், மால்கள் போன்றவைக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9-ம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து விநாயகர் சிலைகளை பொது இடங்களில் 12-ந்தேதி வரை அவற்றை வைத்திருந்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்றை தடுக்கும்பொருட்டு தான் இந்த விழாவை பொது இடங்களில் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story