இடஒதுக்கீட்டு கொள்கைக்கு தமிழகத்தில் வித்திட்ட சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்


இடஒதுக்கீட்டு கொள்கைக்கு தமிழகத்தில் வித்திட்ட சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:43 PM GMT (Updated: 2021-09-10T03:13:01+05:30)

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு தமிழகத்தில் வித்திட்ட சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது இடஒதுக்கீடுதான். இந்த சமூக நீதிக்காக போராடிய பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் நானும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்த ஆபத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களையும் விடுவித்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவருக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இடஒதுக்கீட்டு கொள்கை

தமிழ்நாட்டை பொறுத்தவரை, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு 1854-ம் ஆண்டில் இருந்த வருவாய் வாரியம், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இருந்து தொடங்கியது. என்றாலும், 1920-ம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தான் இடஒதுக்கீட்டு கொள்கை புதிய பரிமாணத்தை பெற்றது. அதாவது வருவாய் துறையில் மாத்திரம் நிலவி வந்த இடஒதுக்கீடு, அரசின் எல்லா துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

சுப்பராயன், பி.டி.ராஜன்

இதனைத்தொடர்ந்து, தமிழை தாய்மொழியாக கொண்டவர்களில் முதல் முறையாக சென்னை ராஜதானியின் முதல்-அமைச்சராக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணிபுரிந்த பெருமை டாக்டர் சுப்பராயனுக்கு உண்டு. இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் (1026-1930) வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை விரிவுபடுத்தப்பட்டது. அப்போது பி.டி.ராஜன் உள்ளாட்சி மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சராகவும், கிட்டத்தட்ட 5 மாதங்கள் முதல்-அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டு கொள்கைக்கு தமிழ்நாட்டில் வித்திட்டதில் சுப்பராயன் மற்றும் பி.டி.ராஜன் ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே இவர்கள் இருவரையும் கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story