கோடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேரடி மோதல்


கோடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேரடி மோதல்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:05 PM GMT (Updated: 9 Sep 2021 10:05 PM GMT)

கோடநாடு விவகாரத்தில், சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் நிறைவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உங்கள் சொந்த இல்லத்திட்டம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பயிரை வேலி காப்பதுபோல், மக்களை போலீசார் காத்து வருகின்றனர். நாம் பண்டிகையை கொண்டாடும்போதுகூட, அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக 13-4-1992 அன்று மகளிர் போலீஸ் நிலையங்களை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். பெண்கள் எளிதாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க வழிவகை செய்தார். அ.தி.மு.க. ஆட்சியில், போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லத்திட்டத்தை தொடங்கினோம்.

2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கு ரூ.2,962 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2020-2021-ம் ஆண்டு ரூ.8,826 கோடியே 57 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதாவது, தி.மு.க. ஆட்சியில் ஒதுக்கப்பட்டதைவிட 3 மடங்கு அதிகம். புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டையில் இடப்பிரச்சினையால் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, அதை முடித்து பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

காவல் துறையில் 2011-ம் ஆண்டு 19 சதவீதமாக காலிப்பணியிடம் இருந்தது. கடந்த ஆண்டில் அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகரத்தில் மட்டும் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 64 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் அவை சரிசெய்யப்பட்டன. தற்போது, கண்காணிப்பு கேமராக்கள்தான் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறது. அதை மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.

உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமரா உள்ள நகரங்களில் டெல்லி முதலிடமும், சென்னை 3-ம் இடமும் பிடித்துள்ளது. நியூயார்க் நகரம் 14-வது இடத்தையும், மும்பை 18-வது இடத்தையும் பிடித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்காக கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் முதல் பரிசையும், சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையம் 5-வது இடத்தையும் பெற்றது.

அடிப்படை வசதிகள் இல்லை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- போலீசாருக்கு கொண்டுவரப்பட்ட உங்கள் சொந்த இல்லத்திட்டத்தை பற்றி கூறினார். காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டால், அதன் லட்சணம் குறித்து தெரியும். இந்த திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் தரமற்றவையாக இருக்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விண்ணப்பங்கள் செய்தும், முன்பணம் செலுத்தியும், வெகுநாட்களாக காத்திருக்க வேண்டிய ஒருநிலை இருக்கிறது. அதில் விண்ணப்பித்த பல பேர் ஓய்வுபெற்று சென்றுவிட்டார்கள்.

இந்த அரசை பொறுத்தவரை, நீங்கள் கொண்டுவந்த திட்டம் என்பதற்காக நாங்கள் கைவிடமாட்டோம். அதை இன்னும் சிறப்பாக, காவலர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் நிறைவேற்றுவோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

எடப்பாடி பழனிசாமி:- பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் போலீசார் சுதந்திரமாக செயல்பட்டார்கள். கட்டப்பஞ்சாயத்து எதுவும் இல்லை.

அவை முன்னவர் துரைமுருகன்:- உங்கள் ஆட்சியில் ரவுடி கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சியை பார்த்தோமே. தூத்துக்குடியில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததே.

தனியாக விரோதம் கிடையாது

எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. ஆட்சியிலும் துப்பாக்கி சூடுகள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து, 1969-ம் ஆண்டு சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, "துப்பாக்கி சூடு நடக்கும்போது உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு போலீஸ் பொறுப்பாகாது" என்று கூறியுள்ளார். எனவே, கலவரத்தை தடுக்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தனியாக எதுவும் விரோதம் கிடையாது.

மு.க.ஸ்டாலின்:- கோடநாடு எஸ்டேட் சாதாரணமான இடம் கிடையாது. கடந்த ஆட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, முகாம் அலுவலகமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. அந்த இடத்தில் குற்றம் நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது நீங்கள்தான் முதல்-அமைச்சர். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?.

தனியார் சொத்து

எடப்பாடி பழனிசாமி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்போது மறைந்துவிட்டார். இப்போது அது தனியார் சொத்து. தனியார் சொத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதில்லை.

மு.க.ஸ்டாலின்:- அப்படி என்றால், அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தக்கூடாது என்று ஏன் கோர்ட்டுக்கு சென்றீர்கள்?. விசாரணைக்கு ஏன் தடை கேட்டீர்கள்?.

எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் எங்கு போய் தடை கேட்டோம். 43 பேருக்கு மேல் சாட்சிகள் இருக்கிறார்கள். அவர்கள் போட்ட வழக்கு அது. நாங்கள் போடவில்லை. வழக்கை நடத்துங்கள், புலன் விசாரணை நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. நாங்கள் தடை செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வேண்டும் என்றே திட்டமிட்டு எங்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். எங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் கிடையாது. அது தனிப்பட்ட பிரச்சினை. வேண்டும் என்றே திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்தது, அதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இன்று பேசுவது, இதை எல்லாம் தவிர்க்க வேண்டும். உண்மை நிலையை கண்டறியுங்கள், யாரும் தடை செய்யவில்லை. உண்மையை கண்டறிய விசாரணை நடத்துங்கள்.

குட்கா

(இந்த நேரத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் எழுந்து பேச அனுமதி கேட்டனர். ஆனால், அவர்களை அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அமரக்கூறினார்)

எடப்பாடி பழனிசாமி:- தமிழ்நாட்டில் பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். குட்காவும் வாகனங்களில் கொண்டுவரப்படுகிறது.

மு.க.ஸ்டாலின்:- குட்கா ஒழிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் யார் யார் கையூட்டு பெற்றார்கள் என்று, போலீஸ் அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை பெயர் இடம்பெற்றிருந்ததே.

எடப்பாடி பழனிசாமி:- கடந்த ஆட்சியில் குற்றங்கள் குறைவாக நடந்தது. இப்போது அதிகமாக நடக்கிறது.

ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு

அவை முன்னவர் துரைமுருகன்:- நாங்கள் வழக்கு போடுகிறோம். நீங்கள் வழக்கு போடாமல், கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்துக்கொள்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி:- இப்போதெல்லாம் வழக்குகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்யலாம்.

அவை முன்னவர் துரைமுருகன்:- ஆன்லைன் இருந்தாலும் உங்கள் லைனே வேறு.

(அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகைகளில் வந்த பல செய்திகளை சுட்டிக்காட்டி பேசினார்)

மு.க.ஸ்டாலின்:- ஆதாரத்தை காட்டி பேசச்சொல்லுங்கள்.

கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை

எடப்பாடி பழனிசாமி:- ஆதாரம் அரசுக்கு கிடைக்கும். எதிர்க்கட்சிகள் பத்திரிகைகளில் வந்ததை வைத்துத்தான் பேச முடியும்.

மு.க.ஸ்டாலின்:- இதையேத்தான் கடந்த ஆட்சியின்போதும் நாங்கள் கேட்டோம். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது உண்மையாக இருந்தால், கட்சிப்பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

(அதன்பிறகும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல பிரச்சினைகள் குறித்து பேசினார்)

சபாநாயகர் அப்பாவு:- பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. ஆதாரத்தை காட்டி பேசுங்கள்.

மு.க.ஸ்டாலின்:- அம்மா உணவகத்தை சேதப்படுத்தியவர் கட்சியை விட்டு நீக்கம் செய்து கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தாசில்தாரை தாக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களை பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story