விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:13 PM GMT (Updated: 9 Sep 2021 10:13 PM GMT)

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க நேற்று ஆர்வம் காட்டினர். பூக்கள்-பழங்கள் விலையும் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

சென்னை,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான பொருட்கள், பழ வகைகள் வாங்குவதில் நேற்று மக்கள் ஆர்வம் காட்டினர்.

சென்னையின் முக்கிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகமாகவே இருந்தது. அந்தவகையில் அவல், பொரி, வேர்க்கடலை, சோளம், கம்பு, கரும்பு, விளாம்பழம், எருக்கம்பூ, தோரணம், வாழைக்கன்று, வெற்றிலை, மா இலை, அருகம்புல் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்களின் விலை வெகுவாகவே உயர்ந்திருந்தது. அந்தவகையில் ஒரு கட்டு அருகம்புல் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், மா இலை (கட்டு) ரூ.10-க்கும், வாழைக்கொத்து (ஜோடி) ரூ.50 வரையிலும், தென்னை தோரணம் (20 கொண்ட கட்டு) ரூ.200 வரையிலும், எருக்கம்பூ மாலை ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை ஆனது.

பூஜை பொருட்கள் விற்பனை

பூஜை பொருட்கள் விற்பனை குறித்து, கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் விற்பனை பரவாயில்லை. கொரோனா காலம் என்பதால் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்றாலும், கடந்த சில மாதங்களை கணக்கிடும்போது ஓரளவு வியாபாரம் நடந்திருக்கிறது. பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்ந்திருக்கிறது. பொதுமக்கள் கூட்டம் அதிகம் சேராதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு விற்பனையில் ஈடுபடுகிறோம்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்) :-

பழங்களின் விலை நிலவரம்

விளாம்பழம்- ரூ.15 முதல் ரூ.20 வரை, கம்பு (1 பீஸ்) ரூ.3, கொய்யா ரூ.30, கலாக்காய் ரூ.150, ஆப்பிள் ரூ.80 முதல் ரூ.120 வரை, சோளம் (1 பீஸ்) ரூ.40, வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.500 வரை, சாத்துக்குடி- ரூ.40 முதல் ரூ.50 வரை, கமலா ஆரஞ்சு- ரூ.40 முதல் ரூ.50 வரை, திராட்சை (கருப்பு) ரூ.60, கருப்பு (பன்னீர்) - ரூ.80, திராட்சை (சீட்லெஸ்) - ரூ.100, சீதாப்பழம்- ரூ.30 முதல் ரூ.40 வரை, ரம்புட்டான்- ரூ.200.

இவ்வாறு அவர் கூறினார்.

பூக்கள் வியாபாரம் மந்தம்

பூக்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில், வரத்து பாதிக்காத நிலையிலும் பூக்களின் வியாபாரம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 2 ஆண்டை காட்டிலும் விநாயகர் சதுர்த்தி வியாபாரம் பாதிப்படைந்தே இருக்கிறது. அடுத்து வரும் புரட்டாசி மாதத்திலும் பூக்கள் வியாபாரம் பெரிதாக இருக்காது’’, என்றார்.

கோயம்பேடு மலர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்) :-

மல்லி-ரூ.700, முல்லை- ரூ.600, அரளி-ரூ.250, சம்பங்கி-ரூ.250, சாதிமல்லி-ரூ.400, செண்டுமல்லி-ரூ.30, கோழிக்கொண்டை-ரூ.40, ரோஸ்-ரூ.150 முதல் ரூ.200 வரை, சாமந்தி-ரூ.100 முதல் ரூ.150 வரை.

கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story