சென்னையில் உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை


சென்னையில் உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Sep 2021 11:14 PM GMT (Updated: 9 Sep 2021 11:14 PM GMT)

சென்னையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.



சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் தனியார் சார்பில் ஏராளமான மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை 26 மகளிர் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளன.

முறையாக உரிமம் பெறாமல் இயங்கும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விதிப்படி, தனியார் மகளிர் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதன்படி, விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும் பார்ம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 
அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர). விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு / விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் தங்குவதற்கு சராசரியாக 120 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து, எந்த உரிமமும் பெறாமல் மகளிர் விடுதியாக மாற்றி, போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story