தனியார் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


தனியார் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை:  அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 11:55 PM GMT (Updated: 2021-09-10T05:25:37+05:30)

தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.சென்னை,

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் வி.பி. ராஜன் செல்லப்பா பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகளுக்கும் 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டும். வணிகவியல் துறையிலோ, வணிகவியல் துறையை சார்ந்த எம்.பி.ஏ., பி.சி.ஏ. மற்றும் ஆங்கிலம் துறையிலோ இடங்கள் காலியாக இல்லை என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் இருக்கும் நிதி நெருக்கடியிலும் 21 புதிய கலைக்கல்லூரிகளை முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 10,439 காலி பணியிடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களை முதலில் நிரப்ப நீங்கள் முயற்சி செய்யுங்கள். அந்த கல்லூரிகளில் அவர்கள் சேர எல்லா வாய்ப்பும் வழங்கப்படும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்ற காரணத்தால், அரசு கல்லூரிகளில் 25 சதவீதம் இடங்களை அதிகரித்து இருக்கிறோம். தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் எல்லாம் கடந்த காலங்களில் 10 சதவீதம் இடங்களை அதிகரித்து கொள்ளலாம் என்று இருந்தது. இப்போது முதல்வரோடு ஆலோசித்து 10 சதவீதத்தை 15 சதவீதமாக உயர்த்தி கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story