வர்த்தக கட்டிடங்களுக்கு கூடுதல் வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்கு அதிகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை


வர்த்தக கட்டிடங்களுக்கு கூடுதல் வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்கு அதிகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 10 Sep 2021 9:54 PM GMT (Updated: 2021-09-11T03:24:15+05:30)

வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிடம், கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

வரி விதிப்பு குழு

அந்த உத்தரவில், ‘‘சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் அமைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்தியகுமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தடை விதிப்பு

அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.துரைசாமி, பொதுநல வழக்கில் தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும். ரிட் வழக்கில் இதுபோல் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர். தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story