பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை


பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2021 10:20 PM GMT (Updated: 10 Sep 2021 10:20 PM GMT)

பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

தஞ்சாவூர்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழகாலனி காந்தி நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய மனைவி நதியா(வயது 31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குத்தாலம் பேரூராட்சியில் டெங்கு பணி மற்றும் சமுதாய பரப்புரையாளராக கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடைப்படையில் நதியா பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நதியா மற்றும் அவருடன் வேலை பார்த்த மேலும் 3 பெண் பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நதியா கடந்த 6-ந்தேதி எலி மருந்தை தின்றார். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதையடுத்து நதியாவின் கணவர் மற்றும் உறவினர்கள் நதியாவின் இறப்புக்கு நீதி வேண்டியும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று மதியம் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கும் அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து நதியாவின் உறவினர்களை சந்தித்து விவரங்களை கேட்டதுடன், ஆறுதலும் கூறினார்.

பின்னர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட பணியாளர்களை திட்டமிட்டு நீக்குகிறார்கள். நதியா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story