மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்?


மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்?
x
தினத்தந்தி 11 Sep 2021 5:12 AM GMT (Updated: 2021-09-11T10:42:50+05:30)

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி பாபு மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் (பொறுப்பு) ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43). வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் திடீரென காரில் இருந்து இறங்கி வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். போலீசார், பிரேத பரிசோதனைக்கு வசீம் அக்ரமின் உடலை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து அவர்கள் வாணியம்பாடி-வேலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூரில் இருந்து மீண்டும் கொண்டு வந்து வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என 1 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட உடல்  வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வாணியம்பாடியில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரமுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி பாபு மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் (பொறுப்பு) ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஷ், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் இருந்த முன்விரோதம் காரணமாக இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்துள்ளார். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற ரவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் என்பதும் தெரியவந்துள்ளது என்று டிஐஜி கூறினார்.

Next Story