அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன் அனைவருக்கும் தடுப்பூசி கவர்னர் தமிழிசை


அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன் அனைவருக்கும் தடுப்பூசி  கவர்னர் தமிழிசை
x
தினத்தந்தி 11 Sep 2021 1:38 PM GMT (Updated: 11 Sep 2021 1:38 PM GMT)

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

புதுச்சேரி
அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தடுப்பூசி

புதுவை அரசின் சுகாதாரத்துறை தேசிய தடுப்பூசி திட்டத்தில் நியுமோகாக்கல் கிருமியில் இருந்து இளம் சிறார்களை பாதுகாக்க நியுமோகாக்கல் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு உரிய காலத்தில் போடுவதன் மூலம் மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
இந்த தடுப்பூசியானது 6 வாரம், 14 வாரம், 9 மாத குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் வியாழன்தோறும் இலவசமாக போடப்படுகிறது.

தமிழிசை-ரங்கசாமி

இந்த தடுப்பூசி திட்டத்தின் தொடக்க விழா எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி போடுவதை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலவசம்

சுகாதாரத்துறையில் தற்போது ஒரு முக்கியமான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நியூமோகாக்கல் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக புதுச்சேரி அரசையும், சுகாதாரத்துறையையும் பாராட்டுகிறேன்.
இந்தியாவில் நிமோனியாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம். இது குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. ஆஸ்பத்திரிகளிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொட்டுமருந்து

அனைவரும் இந்த தடுப்பூசி திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி மட்டுமல்லாது வருங்காலத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. போலியோ சொட்டு மருந்துபோல் கொரோனாவுக்கும் சொட்டு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மிக விரைவில் அனைத்து குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சொட்டு மருந்து கொடுத்துவிடலாம். நமது இந்தியா அதிலும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடுமையான நடவடிக்கை

2 நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்தபோது அம்மாநில முதல்-மந்திரியை சந்தித்து பேசினேன். அப்போது கோவா 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாறியிருப்பதாக சொன்னார். புதுச்சேரி மாநிலத்தில் 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு மிக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
தடுப்பூசி மட்டுமே கொரோனா அலைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி போடவில்லை என்றால் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்ற நிலைக்கு சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட நாட்களுக்குள்

தடுப்பூசி போடுவது அனைவரையும் பாதுகாக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் அவசர சிகிச்சை பிரிவு தேவையில்லை. விடுபட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Next Story