மேலவை எம் பி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு


மேலவை எம் பி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு
x
தினத்தந்தி 11 Sep 2021 1:48 PM GMT (Updated: 11 Sep 2021 1:48 PM GMT)

மேலவை எம்.பி. பதவி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்

புதுச்சேரி
மேலவை எம்.பி. பதவி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

கடும் போட்டி

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக (ராஜ்யசபா) உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அடுத்த மாதம் 6-ந்தேதி நிறைவடைகிறது. இதனால் ஏற்படும் காலி இடத்துக்கு புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த (அக்டோபர்) மாதம் 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்தநிலையில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே எம்.பி. பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. எடுத்துக் கொண்ட நிலையில் மேலவை எம்.பி. பதவியை விட்டுக் கொடுக்குமாறு என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

மறைமுக பேச்சுவார்த்தை

ஆனால் நாடாளுமன்ற மேலவையில் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும், கட்சியின் முக்கிய பிரமுகரை புதுச்சேரி இடத்தில் நிறுத்தவும் பா.ஜ.க. குறி வைத்து செயல்பட்டு வருகிறது.
இதனால் புதுவைக்கான மேலவை எம்.பி. பதவி யாருக்கு? என்பது குறித்து மறைமுகமாக உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாரதியார் நினைவு நாளையயொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், மேலவை எம்.பி. தேர்தல் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, ‘இது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்’ என்றார்.

Next Story