தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 2:32 PM GMT (Updated: 11 Sep 2021 2:32 PM GMT)

புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பிரிந்த 2 தம்பதிகள் சேர்ந்தனர்

புதுச்சேரி
புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பிரிந்த 2 தம்பதிகள் சேர்ந்தனர்.

மக்கள் நீதிமன்றம்

புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த நீதிமன்றத்தை தலைமை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார்.
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி வரவேற்று பேசினார். முதன்மை சார்பு நிலை நீதிபதி ராபர்ட் கென்னடி, வக்கீல் சங்க தலைவர் முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரிந்த தம்பதிகள் சேர்ந்தனர்

புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்காலில் 3 அமர்வும், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வு என 15 அமர்வுகள் செயல்பட்டன.
இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த கிரைய உடன்படிக்கையின் பேரில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் ரூ.91 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் பிரிந்து வாழ்ந்த 2 தம்பதிகள் நீதிமன்ற சமரச பேச்சினால் ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். 35 காசோலை வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

1,515 வழக்குகள்

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 3 ஆயிரத்து 368 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,515 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரூ.4 கோடியே 83 லட்சத்து 64 ஆயிரத்து 407 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

Next Story