இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்; மு.க.ஸ்டாலின் கருத்தை ஆமோதித்து வெங்கையா நாயுடு பேச்சு


இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்; மு.க.ஸ்டாலின் கருத்தை ஆமோதித்து வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:48 PM GMT (Updated: 2021-09-12T02:18:26+05:30)

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆமோதித்துள்ளார்.

பவள விழா
இந்துஸ்தான் வர்த்தக சபையின் பவள விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

கொரோனா தாக்கம்
கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து நாம் சவாலான காலங்களை சந்தித்து வருகிறோம். இந்த தொற்றுநோய் உலக அளவில் கூர்மையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் உள்பட அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுதல், அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 2-வது அலை மறுமலர்ச்சியை மந்தப்படுத்தியிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் திரும்ப வந்துள்ளது. நாம் இப்போது பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22-ம் ஆண்டிற்கான 9.5 சதவீத வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக்கொண்டுள்ளது.

இந்திய அணியாக...
கடந்த 17 மாதங்களில் கற்றுக்கொண்ட பாடங்களால், இப்போது பெருந்தொற்று நோயை மேலும் திறம்பட சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம். வலுவான மேக்ரோ பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், ஜி.எஸ்.டி, அன்னிய நேரடி முதலீட்டை திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் ஆற்றல் கொண்டதாக உள்ளது. பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்.

கவர்ச்சிகர இடம் தமிழ்நாடு
நிலையான முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கம், நல்ல இணைப்பு, உள் கட்டமைப்பு வசதிகள்; திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளிகள் ஆகியவற்றுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக, தமிழ்நாடு திகழ்கிறது.தமிழ்நாடு மிக பண்டைய காலத்திலிருந்து சிறந்து விளங்கும் ஒரு வளமான கலாசார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சில அகழ்வாராய்ச்சி பொருட்களின் ‘கார்பன் டேட்டிங்’ காலத்தை அறியும் ஆய்வு, தாமிரபரணி நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்பதை வெளிப்படுத்தி அதன் தொன்மையின் மீது புத்தொளி பாய்ச்சியுள்ளது. 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலில் தமிழ் இந்திய கலாசாரத்தின் தாக்கத்தை நாம் காணலாம்.

மு.க.ஸ்டாலின் கருத்துகளை...
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன். உண்மையில், இது காலனித்துவ கண் கொண்டல்லாமல் இந்திய கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழகம் மற்றும் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் சத்யநாராயணன் ஆர் தவே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்பல்லோ குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டிக்கு சிறந்த மனிதநேயர் விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

Next Story