வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2021 10:11 PM GMT (Updated: 2021-09-12T03:41:12+05:30)

வடகிழக்கு பருவமழை பேரிடர்களை திறம்பட சமாளிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (அக்டோபர்) தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மத்திய அரசுத்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அறிவுரைகள்

கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

* பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும்பொருட்டு குறுகிய-நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால்கள் மற்றும் ஏரி குளங்களை தூர்வார நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தயாரிக்க வேண்டும்

* பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எச்சரிக்கை செய்திகளை இந்த அவசர கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

‘வாட்ஸ்-அப்’ குழு

* பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை விரைந்து அளித்திடும் வகையில் குடியிருப்போர் நலச்சங்கங்களின் பட்டியல் தயாரித்து ‘வாட்ஸ்-அப்’ குழு அமைக்க வேண்டும்.

* அரசு சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேடல், மீட்பு நிவாரண பணிகளில், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்.

* பொதுப்பணித்துறை உடனடியாக வல்லுனர் குழு அமைத்து நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணித்து தேவைப்படின் அணைகளில் இருந்து அவசரகாலத்திற்கு ஏற்ப வெள்ளநீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

வரைபடம் கட்டாயம்

* மாவட்டந்தோறும் ஏற்படும் அபாயங்களினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடம் கட்டாயம் தயார் செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் குறிப்பாக அனைவரும் வெளியில் செல்லும்போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், பயணிக்கும் போதும் கட்டாயமாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு நகரத்திலும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறிக்கை

* வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு 37 மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆயத்த பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

* எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story