ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து


ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 11 Sep 2021 10:13 PM GMT (Updated: 11 Sep 2021 10:13 PM GMT)

திருவண்ணாமலை ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.




திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  அவர், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஓட்டலில் சாப்பிட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் கவிதா, ஆரணி டி.எஸ்.பி. கோடீஸ்வரன் இருவரும் விசாரணை நடத்தி, அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.  ஓட்டல் உரிமையாளர் அம்ஜித் பாஷா மற்றும் சமையல்காரர் முனியாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  ஆரணி டவுன் பகுதிகளில் நேற்று மட்டும் 12 அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்ததில், காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் மட்டும் தரமற்ற இறைச்சி பிரிட்ஜில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story