புதிய கவர்னர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை: பா.ஜனதா தலைவர் அண்ணாமலை


புதிய கவர்னர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை: பா.ஜனதா தலைவர் அண்ணாமலை
x
தினத்தந்தி 11 Sep 2021 10:16 PM GMT (Updated: 2021-09-12T03:46:29+05:30)

தமிழகத்தில் புதிய கவர்னர் நியமனம் செய்ததில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரையில் கூறினார்.

மதுரை வருகை
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். 

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்ததாக தெரியவில்லை. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் 2014-ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சட்ட திருத்தம் பொருந்தும்.

உள்நோக்கம்
தமிழகத்தின் புதிய கவர்னர் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக கே.எஸ்.அழகிரி கூறுகிறார். அவர், என்ன கூறுவதென்று தெரியாமல் கூறுகிறார். இதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் கவர்னராக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி புரிந்துள்ளனர். முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் 5 ஆண்டு பணி முடிந்த பின், புதிய கவர்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என கிராமத்தில் கூறுவது போன்று கே.எஸ்.அழகிரி செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story