பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 3:14 AM GMT (Updated: 2021-09-12T08:44:46+05:30)

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 813 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையில் 30.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி கீழ்பவானி கால்வாய் உடைந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது உடைப்பு சீரமைக்கப்பட்டதால் இன்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story