மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு புதிய சாதனை ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி + "||" + The Tamil Nadu government has set a new record in the prevention of corona vaccination of 28 lakh people in a single day

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு புதிய சாதனை ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு புதிய சாதனை ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு நேற்று புதிய சாதனை படைத்தது. ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை, 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கியது.

முதல் முறையாக கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் மட்டுமே போடப்பட்டது.

பின்னர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே நடத்து வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து 54 ஆயிரத்து 130 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் பேர் வந்து செல்வதால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 2 தவணை தடுப்பூசி அல்லது 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும் கேரளாவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் ஒரு சுகாதார குழு நிறுத்தப்பட்டு, அங்கு சாலை மார்க்கமாக வருகிறவர் களுக்கு கொரோனா மற்றும் நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாஅறிகுறிகளுடன் வருகிறவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே வழி கொரோனா தடுப்பூசி என்பதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 4-ந் தேதி ஒரே நாளில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 255 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கு 29 லட்சம் தடுப்பூசி பகிர்ந்து வழங்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டனர்.

சென்னையை பொறுத்தவரை பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 1,600 சிறப்பு முகாம்கள் தயார் செய்யப்பட்டன. இந்த முகாம்களில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து வாகனங்கள் மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்டனர். இந்த முகாமில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கூட்டம் அதிகமாக இருக்கும் மையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, ஆதார் சரிபார்க்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. கேரளாவின் எல்லையில் உள்ள 9 மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகளவில் போட பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். காலையில் இருந்தே முகாம்களில் கூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் 1.20 மணி நிலவரப்படி 11.06 லட்சம் பேருக்கும், மாலை 3.15 மணி நிலவரப்படி 17.04 லட்சம் பேருக்கும், மாலை 6 மணி நிலவரப்படி 23 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று இரவு 7 மணிக்கு இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் முடிவுக்கு வந்தன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 21 லட்சத்து 7 ஆயிரத்து 309 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 467 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 370 பேரும், கோவையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 685 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு சாதனை படைத்து இருப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் சிறப்பு முகாம்களுக்கு வந்ததே காரணம் ஆகும்.

இதுகுறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்புவிடம் ‘தினத்தந்தி’ செய்தியாளர் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த 15 நாட்களாக தடுப்பூசி போடுவதற்கு அதிக முக்கியத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரிகளும் மேற்கொண்டனர். தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்து அதை ஒரு மிகப்பெரிய முகாமாக அனைத்து சிற்றூர்களிலும், நகர் பகுதிகளிலும் பரவலாக நடத்துவது என்று தெரிவிக்கப்பட்டது. போலியோ தடுப்பு மருந்து முகாமை போல இதை நடத்துவது என்று கடந்த புதன்கிழமை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்து அதன்படி முடிவு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 100 பேருக்கு தடுப்பூசி போட்டு இலக்கை அடையவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் ஒருங்கிணைந்து, மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற்று இந்த முகாம்களுக்கு வலுசேர்த்தனர். மேலும் பெரிய அளவில் பரப்புரையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்கள் கிளை நதிகளாக வந்து மூல நதியை வளம்பெற செய்தனர். அதன் காரணமாக சில இடங்களில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி தலைவர்கள் பல இடங்களில் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஊக்குவித்தனர்.

இது முடியுமா? என்று நினைத்த இலக்கு, சரக்கு அதற்குள் முடிந்துவிட்டதே என்ற அளவுக்கு உடனடியாக நிறைவேற்றப்பட்டது. சில இடங்களில் திருவிழா கூட்டத்தை போல மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சிற்றூர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மக்களிடம் இருந்த மனத்திரை இப்போது அகன்றது. சேலம் போன்ற மாவட்டத்தில் சிற்றூர்களுக்கு நகரத்தில் இருந்து தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மீது இருந்த அச்சம் மக்கள் மத்தியில் தற்போது இல்லாமல் போய்விட்டது.

இந்த முகாமை வாரம் ஒருமுறை நடத்தி, வரும் அக்டோபர் மாதத்துக்குள் பெரும் அளவினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக நடவடிக்கை எடுக்கப்படும். அனேகமாக பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த தடுப்பூசி முகாமுக்கு முழுமையாக ஒத்துழைத்த மருத்துவ பணியாளர்களுக்கு, ஊக்கமளித்த மாவட்ட கலெக்டர்களுக்கும், முகாமில் இருந்து இயக்கமாக மாற்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வரும் நவம்பர் மாதத்தில் இருந்து பொருளாதாரம் வழக்கமான சுழற்சியினை அடைவதே தமிழக அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.