கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் 16 லட்சம் பேர் பங்கேற்ற ‘நீட்' தேர்வு


கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் 16 லட்சம் பேர் பங்கேற்ற ‘நீட் தேர்வு
x
தினத்தந்தி 12 Sep 2021 8:13 PM GMT (Updated: 12 Sep 2021 8:13 PM GMT)

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் 16 லட்சம் பேர் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு சுகாதாரத்துறையின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்தது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘நீட்' தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வுக்கு 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெறுவதால், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 155 நகரங்களில் நடத்தப்பட்ட ‘நீட்' தேர்வு, இந்த ஆண்டு 202 நகரங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் 3 ஆயிரத்து 860 மையங்களில் தேர்வு நடந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் செங்கல்பட்டு, சென்னை, கோவை உள்பட 18 நகரங்களில் உள்ள 224 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மொத்தமாக தமிழ்நாட்டில் 40 ஆயிரத்து 376 மாணவர்களும், 70 ஆயிரத்து 594 மாணவிகளும் என ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 992 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் 2-வது ஆண்டாக தேர்வு நடைபெற்றது. இதன் காரணமாக சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு இருந்த ஹால் டிக்கெட்டிலும் அதற்கான அறிவுரைகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

தேர்வு மையத்துக்கு முக கவசம் அணிந்து வந்திருந்த மாணவ-மாணவிகளை சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நிற்கவைத்து உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பிறகு, காலை 11.30 மணி முதலே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதித்தனர்.

மேலும் தேர்வு முறைகேட்டைத் தவிர்க்கும் விதமாக சில கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தன. அந்த கட்டுப்பாடுகளின்படி, செயின், காதணி, மூக்குத்தி, மோதிரம் அணிந்து வந்திருந்தவர்களை அவற்றைக் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.

தேர்வு மையத்துக்குள் கையில் ஹால் டிக்கெட் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள், தெளிவாக தெரியக்கூடிய வகையில் வாட்டர் பாட்டில், 50 மி.லி. கிருமிநாசினி பாட்டில் மட்டும் கொண்டு செல்ல மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு அறைக்கு செல்வதற்கு சற்று தூரத்துக்கு முன்பு மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை சார்பில் பிரத்தியேகமாக ‘என்95' முக கவசம் வழங்கப்பட்டது. வீட்டில் இருந்து அணிந்து வந்திருந்த முக கவசத்தை மாணவ-மாணவிகள் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டனர். அதனை பள்ளி நிர்வாகங்கள் பாதுகாப்பான முறையில் அகற்றின.

தேர்வு மையத்துக்கு பிற்பகல் 1.30 மணி வரையில் வருபவர்களே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில பள்ளிகளில் கூடுதலாக 10 நிமிடம் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கு சாலிகிராமத்தைச் சேர்ந்த மாணவி தேவதா 1.35 மணிக்கு பதற்றத்துடன் வந்தார். அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். அதன்பின்னர், பிற்பகல் 1.40 மணியளவில் தேர்வு மையத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதி பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

சில பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்த மாணவ-மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. சென்னை மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் 4 நிமிடம் (பிற்பகல் 1.34) தாமதமாக வந்த மாணவரை அனுமதிக்கவில்லை.

ஒரு சில இடங்களில் ஆதார் அட்டையை மறந்துவந்த மாணவர்களுக்கு, அவர்கள் வீட்டில் இருந்து மற்றொருவர் அதை எடுத்துவந்து கொடுத்த நிகழ்வுகளும் வழக்கம்போல் அரங்கேறின. திருவள்ளூரில் இருந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் தேர்வு எழுத வந்திருந்த ஒரு மாணவி, ஆதார் அட்டையை எடுத்துவர மறந்துவிட்டார். அவர் ஆதார் அட்டையை மீண்டும் எடுத்துக்கொண்டு தேர்வு மையத்துக்கு வருவதற்குள் தாமதம் ஆகிவிட்டது. அதனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சோகத்துடன் திரும்பிச் சென்றார்.

இதுதவிர, முதல்நாள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோர் நுழைவுவாயிலில் நின்று பார்த்து தவிப்பதுபோல, ‘நீட்' தேர்வு மையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து தேர்வு அறைக்குச் செல்லும் வரையில் அவர்களை வைத்த கண் வாங்காமல் பெற்றோர் சிலர் தவிப்புடன் கவனித்துக்கொண்டிருந்ததை நேற்று பார்க்க முடிந்தது. தேர்வுக்கு செல்வதற்கு முன்பு பெற்றோர், ‘நன்றாக தேர்வு எழுதி வா’ என ஆசீர்வதித்து தமது மகன், மகளை அனுப்பினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி ‘நீட்' தேர்வு நடத்தப்பட்டு, அக்டோபர் 16-ந் தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டும் அதேபோல் செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. தேர்வு முடிவைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று முன்பே வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story