எல்லை போராட்ட வீரர்களை போற்றுவதற்கு தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு


எல்லை போராட்ட வீரர்களை போற்றுவதற்கு தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 12 Sep 2021 9:06 PM GMT (Updated: 12 Sep 2021 9:06 PM GMT)

மொழிப்போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும், எல்லை போராட்ட வீரர்களைப் போற்றுவதற்கும் தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு தொடக்க விழா, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் நேற்று நடந்தது. பாரதியாரின் உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாரதியார் நூற்றாண்டு சுடரை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்தார்.

விழாவில் மத்திய இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் கலந்து கொண்டு செப்புமொழி 18 உடையாள் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பாரதி மறைந்தாலும் அவரது கவிதை வரிகள் மறையாது. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பாரதியின் அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் உள்ள பாரதியின் பாடல்களை கொண்டு அவற்றை மீண்டும் அச்சிடலாம். அத்தகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு.

கருணாநிதி முதல்-அமைச்சரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கிப் பெருமை சேர்த்தார். அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.பா.ஆதித்தனார் தலைமையில் 1973-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவை போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை அரசு சார்பில் அறிவித்திருக்கிறேன்.

‘இது எனது அரசல்ல, நமது அரசு' என்று நான் சொல்லி இருக்கிறேன். இந்த அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஒரு கொள்கையின் அரசாக, ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் உணர்ச்சிமிகு கவிதைகளை தந்த மகாகவி பாரதியைத் தமிழ்நாடு போற்றுகிறது.

இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளை போற்றுவதற்கும். மொழிப்போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும். எல்லை போராட்ட வீரர்களை போற்றுவதற்கும் தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை. நான் அதை பட்டியலிட ஆரம்பித்தால் அது மிக நீளமாக போய்விடும்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் அறிவிப்புகளை கடந்த வாரத்தில் நான் செய்தேன். பாரதியின் நண்பர் பரலி சு.நெல்லையப்பருக்கு நிதி உதவி வழங்கி வந்த அரசுதான் தி.மு.க அரசு. அந்த வரிசையில் தான் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story