தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவையில் 2 நாட்களுக்கு கனமழை


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவையில் 2 நாட்களுக்கு கனமழை
x
தினத்தந்தி 12 Sep 2021 10:48 PM GMT (Updated: 12 Sep 2021 10:48 PM GMT)

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை, 

வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

தற்போது அந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் கனமழையும், ஓரிரு உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், வட உள்மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘வால்பாறை 9 செ.மீ., பந்தலூர் 6 செ.மீ., சின்கோனா 5 செ.மீ., சோலையாறு, தேவலா தலா 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

Next Story