நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா சட்டசபையில் தாக்கல்


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 13 Sep 2021 5:22 AM GMT (Updated: 13 Sep 2021 5:22 AM GMT)

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

சென்னை

தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில்  இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது..

இன்றைய சட்டசபை கூட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகவல் தெரிவித்தனர்.

இன்று சட்டசபை கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் 

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசியதாவது;-

நீட் தேர்வை ஆரம்பம் முதலே தி.மு.க. எதிர்த்து வருகிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.

சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது; சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது.

நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

என கூறினார்.

Next Story