கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்


கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்
x
தினத்தந்தி 13 Sep 2021 9:00 AM GMT (Updated: 13 Sep 2021 9:00 AM GMT)

கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் மொத்த சாட்சிகளின் எண்ணிக்கை 103. ஆனால் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த கனகராஜன் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது அதே போல, குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாயின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு, சிவன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 இன்றுகாலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜரானார். தனது வழக்கறிஞர் செந்திலுடன் விசாரணைக்கு சென்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு  ஆசிஷ் ராவத் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை - கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜுக்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், வாளையார் மனோஜுக்கு ஜாமீனில் செல்ல யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை. இதனால், அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

நிபந்தனைகளை தளர்த்த கோரி, அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உதகை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி சஞ்சய்பாபா தெரிவித்தார்.


Next Story