தொழில் வாய்ப்பில் பாலின பாகுபாடு கூடாது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு


தொழில் வாய்ப்பில் பாலின பாகுபாடு கூடாது  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 13 Sep 2021 2:55 PM GMT (Updated: 13 Sep 2021 2:55 PM GMT)

தொழில் வாய்ப்பில் பாலின பாகுபாடு கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

புதுச்சேரி
தொழில் வாய்ப்பில் பாலின பாகுபாடு கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

புதுவையை அடுத்த காலாப்பட்டில் புதுச்சேரி அரசு என்ஜினீயரிங் கல்லூரி 1986-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்தும் வழங்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ரூசா (ராஷ்ட்ரிய உச்சதர் சிக்‌ஷா அபியான்) திட்டத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழக தொடக்க விழா பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடந்தது. கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றுப் பேசினார்.
புதிய பல்கலைக்கழகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆய்வு படிப்புகள்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது புதுச்சேரியில் முதல் பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது. தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது மாணவர்களுக்கு புதிய படிப்புகளை தரும். புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்படும். இங்கு பல்வேறு ஆய்வு படிப்புகளும் உள்ளன. இங்குள்ள பேராசிரியர்கள் 350 பேர் ஆய்வு படிப்பினை முடித்தவர்களாக உள்ளனர். தேசத்தின் வளர்ச்சிக்கு ஆய்வு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அப்படி இருந்தால்தான் நாடு வலிமையானதாக இருக்க முடியும்.

சமமான வாய்ப்பு

வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றன. வளர்ந்து வரும் நாடான இந்தியா பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நமது நாட்டில் 23 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்தபின்பு அனைவருக்கும் கல்வி அளிக்க திட்டம் கொண்டுவரப்பட்டும் இன்னும் 20 சதவீத மக்கள் கல்வி கற்காத நிலையில் உள்ளனர். மேலும் பாலின பாகுபாடு, சமூக பாகுபாடு ஆகியவையும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும்.

இயற்கையும், கலாசாரமும்

உலக அளவில் இப்போது வெப்பநிலை உயர்ந்து வருகிறது. நமது பிரதமர் மோடி காலநிலை மாறுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இயற்கையும், கலாசாரமும் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இளைஞர்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். பீசா, பர்க்கர் போன்றவை நமது சூழலுக்கு உகந்தது அல்ல.
நமது பாரம்பரிய உணவே சிறந்தது. உடற்பயிற்சியிலும் இளைஞர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். பெண் தொழில் முனைவோருக்கு சம வாய்ப்பு தரப்பட வேண்டும். ஆண், பெண் பாகுபாடு இதில் பார்க்கக்கூடாது. சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் இளைஞர்கள் முன்னேறுவார்கள்.

தியாகிகளின் வரலாறு

உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில்தான் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் காலங்களில் வீடுவீடாக சென்று பூத் சிலிப் தருவது போன்று தடுப்பூசி செலுத்தவும் எம்.எல்.ஏ.க்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். 
நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளான அரவிந்தர், பாரதியார், வ.உ.சி., பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வது அவசியம். மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் நம் நாட்டு தியாகிகளின் விவரங்களை பாடத்திட்டங்களில் சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரியானது தற்போது தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெளிவுபடுத்தினார். மாணவர்களின் பயத்தை போக்குவது அரசின் கடமையாகும்.
இந்த கல்லூரியில் படித்து முடித்து செல்லும் மாணவ, மாணவிகள் 90 சதவீதம் பேர் நல்ல பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்த கல்லூரியின் புகழ் உலக அரங்கில் பரவி உள்ளது. இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது அரிது. விஞ்ஞானிகள் புதிய படைப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். என்ஜினீயர்கள் அதை செய்து முடிக்கிறார்கள்.
என்ஜினீயரிங் போன்று அடிப்படை கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்கவேண்டும். அந்த பெயரை மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம் 

முன்னதாக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்பட முதல் விதை விதைத்தவர் துணை ஜனாதிபதி. மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை புதுச்சேரிக்கு கேட்டபோது தயக்கமின்றி ஒப்புதல் தந்தார். அதற்கான நிதியும் தந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கல்யாணசுந்தரம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story