பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு


பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 13 Sep 2021 3:18 PM GMT (Updated: 13 Sep 2021 3:18 PM GMT)

பல்கலைக்கழகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

புதுச்சேரி
பல்கலைக்கழகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

தொடக்க விழா

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.15 கோடி செலவில் 2.4 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. 
விழாவிற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் வரவேற்று பேசினார்.
சூரிய மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல்முறை

உலக அளவில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றம் என்பது எதிர்கால நிகழ்வல்ல. அதனை நாம் ஏற்கனவே அனுபவித்து வருகிறோம். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அடுத்த நில ஆண்டுகளில் உலக நாடுகள் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாம், பசுமை எரிசக்திகளான சூரிய ஒளி, காற்று, சிறிய நீர் மின் திட்டங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 
சமீபமாக இந்தியாவில் சூரியஒளி மின்உற்பத்தி மிக முக்கியமாக விளங்குகிறது. இதற்கு மத்திய அரசு பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் முறையாக புதுச்சேரி பல்லைக்கழகத்தில் தான் மிகப்பெரிய சூரியஒளி மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும்
சூரியஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் போது அதனை சேமிக்கும் எந்திரம் மற்றும் சூரியஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தொழில்நுட்ப கருவிகளுக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்காமல் இருக்க நாம் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
சூரியஒளி மின்உற்பத்தி திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் பயிற்சி பெற்ற வல்லுனர்கள் நம் நாட்டில் குறைவாக உள்ளனர். இதனை மேம்படுத்த வேண்டும். 
பல்கலைக்கழகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும். முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள் சமர்ப்பிக்கும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உலோக அறிவியல் திட்டங்களை மேற்கொண்டு அதில் ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

நீர் நிலைகள்

தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் நீரில் மிதக்கும் சூரியஒளி மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் நீர் நிலைகள் மீது இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது நீர் ஆவியாதல் தடுக்கப்படும். நீர் சேகரிப்பு அதிகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், புதுவை பல்கலைக்கழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் இங்கு மழைநீர் சேகரிப்பு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தெலுங்கானா கவர்னர் மாளிகை முழுவதும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

ரங்கசாமி

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
சூரிய ஒளியில் இருந்து 2.4 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இதேபோல் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 1.4 மெகாவாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும். இதே போல் அரசு கட்டிடங்கள், காலி இடங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story