ரூ.275 கோடியில் காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்


ரூ.275 கோடியில் காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Sep 2021 6:24 PM GMT (Updated: 13 Sep 2021 6:24 PM GMT)

ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ.275 கோடியே 76 லட்சம் செலவில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

செல்போன் செயலி
மறைந்த போலீசாரின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம். கணினி, மென் பொருட்களுக்காக செலவினம் ரூ.33 கோடி. பொது மக்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த 1 லட்சத்து 20 ஆயிரம் காவல் ஆளினர்களுக்கு ரூ.10 கோடி செலவில் சென்னை அண்ணா மேலாண்மை மையத்தில் பயிற்சி வழங்கப்படும். மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல் படை குழுமம் மூலம் ரூ.90 லட்சம் செலவில் 6 மாத பயிற்சி வழங்கப்படுகிறது. கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணி புரிய ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் பணி அமர்த்தப்படுவார்கள். இதற்கான தொடர் செலவினம் ரூ.3 கோடியே 40 லட்சம்.

போலீசார்-பொது மக்கள் இடையேயான உறவை மேம்படுத்த காவல் ஆணையம் உருவாக்கப்படும். சென்னையில் சைபர் குற்ற போலீஸ் நிலையங்கள், இணையதள காணொலி மூலம் புகார் அளிக்கும் வசதி, போலீஸ் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு செல்போன் செயலி, வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களின் குறைகளை களைய தனிப்பிரிவு, சுற்றுலா தலங்களில் சுற்றுலா காவல் துறை உருவாக்கப்படும். டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும்.

காவலர் அங்காடிகள்
போலீசாருக்கான இடர்படி 800-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும். போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை பஸ்களில் மாவட்டத்திற்குள் பயணம் செய்ய நவீன அடையாள அட்டை வழங்கப்படும். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். போலீசாரின் மனைவிகளுக்கும், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை திட்டம், 38 மாவட்டங்களில் 7 மாநகரங்களில் தலா ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம். குறை தீர்க்க ரூ.25 லட்சம் செலவில் ஒரு தனி செயலி அறிமுகப்படுத்தப்படும். மாநில நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறை உள்ளிட்டவைகளில் பணிபுரிபவர்களுக்கு உணவுபடி வழங்கப்படும்.

பதவி உயர்வுகளுக்கான காலவரம்பை ஆய்வு செய்ய ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்படும். புதியதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் காவலர் அங்காடிகள் நிறுவப்படும். சிறப்பு குறைதீர்ப்பு முகாம் ஏற்படுத்தி தரப்படும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் ரொக்க சில்லரை செலவின நிதி உயர்த்தப்படும். ரோந்து பணிக்காக ரூ.10 கோடியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கப்படும்.

காவலர் குடியிருப்புகள்
ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ.275 கோடியே 76 லட்சம் செலவில் 896 காவலர், தலைமை காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். அலுவல் நிமித்தமாக சென்னை வரும் காவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் 16 கோடியே 20 லட்சம் செலவில் 450 காவலர்கள் தங்குமிடம் கட்டப்படும். வீடு கட்டி தரும் திட்டம் திருவாரூர், தேனி மாவட்டகளுக்கு விரிவுபடுத்தப்படும். கோவை காந்திபுரத்தில் 1.4 ஏக்கர் இடத்தில் 140 காவல்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ரூ.54 கோடி செலவில் கட்டப்படும். வங்கி, மோசடி, பதிவுரு மோசடி உள்ளிட்ட இணைய குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்ய ஒரு கோடி ரூபாய் செலவில் நிபுணர்களின் சேவை பயன்படுத்தப்படும். அனைத்து உட்கோட்டங்களிலும் புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், சி.சி.டி.வி.களை பார்வையிட துணை காவல் ஆணையாளர் என்ற பதவி ரூ.72 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். சிலை திருட்டு தடுப்பு பிரிவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, சிலைகளை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story