ஆம்புலன்ஸ் டிரைவர்களை கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்


ஆம்புலன்ஸ் டிரைவர்களை கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:08 PM GMT (Updated: 13 Sep 2021 7:08 PM GMT)

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வாடகை வசூலிப்பது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்களை கண்டித்து சட்டசபை முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வாடகை வசூலிப்பது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்களை கண்டித்து சட்டசபை முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வசதியற்றவர்கள்

ஜிப்மர் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளில் தரமான இலவச மருத்துவம் கிடைப்பதாலும், தனியாரிடம் சிகிச்சை பெற வசதி இல்லாததாலும் அதிகம் பேர் இங்கு வருகிறார்கள். 
இதில் சிலர் நோய் தாக்கம் காரணமாக இறந்து போய் விட்டால் உடலை குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதில் தான் படாத பாடுபடுகின்றனர்.  இதற்காக ஆம்புலன்ஸ் உதவியை நாடிச் சென்றால் அதிக அளவில் வாடகை கேட்டு தலை சுற்ற வைக்கிறார்கள். அதிலும் தமிழக பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை.  உடலை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை பயன்படுத்தி பணம் கறப்பதில் தான் குறியாக இருக்கின்றனர். 

குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம்

அதாவது, 100 கி.மீ. தூரம் என்றால் கூட ரூ.10 ஆயிரம்தான் குறைந்தபட்ச கட்டணம். தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் தான் இதுபோன்றவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளை தேடி வருகிறார்கள். ஆனால் மனிதநேயம் மறந்து சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் வாடகை பேசுவதில் கறார் காட்டுவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுதான் இப்படி என்றால் தன்னார்வ அமைப்புகள் இயக்கும் ஆம்புலன்ஸ்களை தேடிச் சென்றால் அதற்கும் வாடகை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விடுவதில்லை. தகராறு,   வாக்கு வாதம் செய்து தடுப்பது போன்ற முகம் சுளிக்கும் வேலைகளில் ஈடுபடுவதால் தன்னார்வலர்களும் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  இதுபோன்ற சூழ்நிலையெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அவர்களது உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாடகை கேட்டு நெருக்கடி கொடுப்பது துரதிர்ஷ்டமானது.

திடீர் போராட்டம்

இந்தநிலையில் நேற்று லாஸ்பேட்டையை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போனார். அவரது உடலை (சுமார் 2 கி.மீ.) எடுத்துச் செல்ல ரூ.2 ஆயிரத்து 500 கேட்ட கொடுமை அரங்கேறி உள்ளது.  அதை கொடுக்க முடியாத நிலையில் மற்றொரு ஆம்புலன்சை ரூ.1,500 கட்டணத்துக்கு உறவினர்கள் அமர்த்தியுள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிரட்டி உடலை எடுக்கவிடாமல் செய்து திருப்பி அனுப்பிய அவலம் நடந்துள்ளது.
இதனை கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி சமாதானம் செய்தனர்.    இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Next Story