1 முதல் 8 வரை வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Sep 2021 1:02 PM GMT (Updated: 14 Sep 2021 1:02 PM GMT)

மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த செப்.1ஆம் தேதி, 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாவட்டங்களில் ஆசிரியா்கள், மாணவா்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பயிற்சிக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்தும் ஆலோசித்தோம். 1 முதல் 8 வரை வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம். பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

Next Story