மேலவை எம்.பி. பதவி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்


மேலவை எம்.பி. பதவி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை  தொடக்கம்
x
தினத்தந்தி 14 Sep 2021 1:57 PM GMT (Updated: 14 Sep 2021 2:31 PM GMT)

புதுச்சேரி மேலவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

புதுச்சேரி,

மேலவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  நாளை  தொடங்குகிறது

வேட்புமனு தாக்கல் தொடக்கம்

நாடாளுமன்ற மேலவையின் புதுவை எம்.பி.யாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபை செயலாளர் முனிசாமியிடம் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இதற்கான கடைசி நாள் வருகிற 22-ந்தேதி ஆகும்.

வாக்குப்பதிவு

வேட்புமனு பரிசீலனை 23-ந்தேதி நடைபெறும். 27-ந்தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். போட்டி இருந்தால் அக்டோபர் 4-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். இதற்காக சட்டசபை செயலகத்தின் 4-வது மாடியில் உள்ள கமிட்டி அறையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 6-ந்தேதியுடன் நிறைவடையும்.

அரசியல் கட்சிகள்

தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுவை 3 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சையாக இருந்தால் 10 எம்.எல்.ஏ.க்களும் முன்மொழிய வேண்டும்.
இந்த தேர்தலை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணிக்கே அதிக வெற்றிவாய்ப்பு உள்ளது. ஏனெனில் என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் என மொத்தம் உள்ள எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாக உள்ளனர். இதுதவிர 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு உள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ்

மேலவை எம்.பி. பதவியை பெற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் எம்.பி. பதவியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியே எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அந்த கட்சி சார்பில் எம்.பி. பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் ஒருவர் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story