மாநில செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் + "||" + State Legislature MP Election DMK Candidates Dr. Kanimozhi, K.R.N.Rajeshkumar

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 எம்.பி. பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 233 உறுப்பினர்களை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 12 பேரை மத்திய அரசே நேரடியாக நியமனம் செய்யும்.

அந்த வகையில், மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கு 18 எம்.பி. பதவிகள் உள்ளன. இவற்றில், 3 இடங்கள் காலியாக இருந்தன. அதாவது, அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் மரணமடைந்ததால் அந்த இடம் காலியானது. இதேபோல், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ததால், அந்த இடங்களும் காலியாக இருந்து வந்தது.

முதலில் முகமது ஜான் இடத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முகமது அப்துல்லா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

தற்போது கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இடத்துக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2021 அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை 2 உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கனிமொழி மூத்த தலைவர் என்.வி.என்.சோமுவின் மகள் ஆவார். எம்.பி.பி.எஸ். மருத்துவரான இவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

மற்றொரு வேட்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.காம். முதுகலை பட்டம் பெற்றவர். இவர் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் வருகிற 29-6-2022 வரை இருக்கிறது. எனவே, அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர் 8 மாத காலம் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அதேபோல், கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2-4-2026 வரை இருக்கிறது. எனவே அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் 4 ஆண்டுகள் 2 மாதம் பதவியில் இருக்க முடியும்.

தற்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தி.மு.க. வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.